-இந்திய ஒன்றிய அரசிடம் தொல். திருமாவளவன் கோரிக்கை-
தமிழ்மக்களின் நலன்கருதி இலங்கை தேசத்துக்கான ஆட்சி நிர்வாகத்தில் ‘கூட்டாட்சி’ (சமஷ்டி) நிர்வாக முறையை புதிய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற செய்ய உரிய நடவடிக்கைகளை இந்திய ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் இக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
திருகோணமலையில் ஞாயிக்கிழமை புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பொலிஸார் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சிங்கள, பௌத்த பேரினவாதிகள் புத்தர் சிலையை அப்புறப்படுத்தியதை கண்டித்ததுடன், உடனே அதனை அங்கே நிறுவிட வேண்டுமென கொக்கரித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் அதேசிலையை அதே இடத்தில் நிறுவிப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் இடதுசாரி பாரம்பரியத்தைச் சார்ந்தவர்களென காட்டிக் கொள்ளும் ஜேவிபி அரசு, வழக்கமான ‘சிங்கள பேரினவாத அரசு’ தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது. இதனை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழர்களின் தாயகமான ஈழமண்ணில் கலாச்சார படையெடுப்பை நடத்தும் ஒரு வடிவமாக ஆங்காங்கே புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கைகளில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். வலதுசாரிகள் மட்டுமின்றி இடதுசாரிகளும் அதனைத் தொடரும் நிலை உள்ளது. இதற்கு அங்குள்ள அரசமைப்புச் சட்டம்தான் வழிவகுக்கிறது.
இவ்வாறான நிலையில், தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசு விரைவில் புதியதொரு அரசமைப்புச் சட்டத்தை யாத்திட திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
‘இந்திய – இலங்கை ஒப்பந்தந்தை’ தமிழர்களின் தரப்பாக நின்று இந்திய ஒன்றிய அரசு ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த சிங்கள ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டிய ‘தார்மீகப் பொறுப்பு’ இந்திய ஆட்சியாளர்களுக்கு உண்டு.
ஆகவே, புதிய அரசியல் யாப்பில் தமிழ்த் தேசிய இனத்துக்கான முழுமுற்றான ‘தன்னாட்சி அதிகாரத்தை’ வழங்குவதற்குரிய வாய்ப்பை உருவாக்கிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு எமது கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
அண்மையில், நான் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தபோது ஈழத்தின் களநிலையை என்னால் உணர முடிந்தது. யுத்தத்தின்போது நேரடியாகவே இனவழிப்புச் செய்யப்பட்ட தமிழ் மக்கள், இப்போதும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிடப்பட்ட வகையில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது.
எனவே, புதிய அரசமைப்பில் தமிழர்களுக்கான இறைமையுடன் கூடிய ‘சமஷ்டியை’ உறுதி செய்வதே இத்தகைய ஆக்கிரமிப்புகளிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் அவர்களை விடுதலை செய்யும்.எனவே இந்திய ஒன்றிய அரசு தமிழ்மக்களின் நலன்கருதி இலங்கை தேசத்துக்கான ஆட்சிநிர்வாகத்தில் ‘கூட்டாட்சி’ (சமஷ்டி) நிர்வாக முறையை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எமது கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என்றார்.


















