அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி நுகேகொடையில் மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்நிலையில், எமக்கு போட்டியாக ஜனாதிபதி 20 ஆம் திகதி தங்காலையில் மக்கள் கூட்டத்தை நடத்துகிறார். ஜனாதிபதியின் கூட்டத்துக்கு ஆட்களை திரட்டும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி. டி.வி.சானக குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கூட்டத்துக்கு பொதுமக்கள் எவரும் தன்னிச்சையாக செல்வதில்லை. ஆகவே ஜனாதிபதியின் கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்கும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த அரசியல் கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்கும் அறிவிப்பை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விடுத்துள்ளார்.
இந்த விடயம் பொய் என்று அரசாங்கத்தால் குறிப்பிட முடியுமா? ஜே .வி.பி.யின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.


















