-வடமராட்சி வடக்கு க.கூ.ச. சமாச உபதலைவர் வர்ணகுலசிங்கம்-
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கடற்றொழிலை அபிவிருத்தி செய்யப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் சட்டவிரோத கடற்றொழில் மற்றும் இந்திய இழுவைமடி படகு தொழில்களை கட்டுப்டுத்தாமல் எப்படி கடற்றொழிலை அபிவிருத்தி செய்யமுடியும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் தனது இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதும் அதிகளவான இந்திய இழுவைப் படகுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வந்து செல்கின்றன. உள்ளூர் இழுவை மடி படகுகளும் சட்ட விரோத இழுவைமடி படகுகளும் சட்ட விரோதமாக தொழில்கள் மேற்கொண்டு வருவதனால் மீன் உற்பத்தி பெருகுமிடங்கள் அழிந்து வருகிறது. மீன் பெருக்கமும் குறைந்து வருகிறது. இதனால் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் குறிப்பிட்டது போன்று மீன் இல்லாத கடலை எப்படி அபிவிருத்தி செய்ய முடியும்.
சொப்பிங்பைகள் தற்போது காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வர்த்தகர்கள் தான் நன்மை அடைகின்றனர். சொப்பிங் பைகள் மற்றும் பிளாஸ்ரிக் உற்பத்தி செய்வோரை கட்டுப்படுத்தாது அப்பாவி மக்களை வருத்துகின்றனர். அதிகளவான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கடற்கரை ஓரங்களில் ஒதுங்குகின்றன. ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் வாய் வார்த்தைகளில் கூறுவதை விடுத்து கடற்றொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


















