நாட்டில் வேறு எந்தப் பிரதேங்களிலும் இல்லாத நிர்வாக நடைமுறைகள் வடக்கு மாகாணத்திலுள்ள பிரதேசங்களில் காணப்படுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சத்தியலிங்கம் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
காலனித்துவ ஆட்சிக்கு பின்னர் சுதந்திர இலங்கையில் மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. ஒற்றையாட்சி யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பல இன மக்களுக்கு அதிகார பரவலாக்கம் இடம்பெற்றாலும் அது திறம்பட இயங்காமல் இருப்பது கசப்பான வரலாற்று உண்மையே. ஒரு சமூகத்தை முன்னிருத்தி உருவாக்கும் சட்டங்கள் நாட்டில் சாந்தி, சமாதானத்தை ஏற்படுத்தாது.
இதேவேளை எங்குமே இல்லாத சில நிர்வாக நடைமுறைகள் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்தில் வௌ;வெறு பிரதேசங்களில் இருந்து மகாவலி எல் வலயம் என்ற பெயரில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கென மணலாறு பிரதேச செயலகப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அது 6 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செயலாளர் பிரிவில் நிர்வாக ரீதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்றது.
இந்நிலையில் குறித்த பிரதேச செயலகப் பிரிவின் 5 வட்டாரங்கள் வவுனியாவில் வாக்களித்து உறுப்பினர்களை தெரிவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான நிர்வாக நடைமுறை நாட்டில் வேறு எங்கும் கிடையாது.
குடியேற்றப்பட்ட மக்களை ஏமாற்றாமல், இந்த அரசியல் சித்துவிளையாட்டுகளை நிறுத்தி மணலாறு பிரதேச சபையை நிறுவுங்கள். பொய்கூறி அழைத்து வரப்பட்ட மக்களுக்கு அங்கு பூர்விகமாக இருந்த தமிழ் மக்களின் வயல்களும் விவசாய இடங்களை அபகரிக்கின்றனர்.
குடியேற்றப்படும் மக்கள் அந்தக் காணிகளுக்கு உரிமை கோருகின்றனர். பூர்விக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி குடியேற்றவாசிகளுக்கு நண்மைகளை ஏற்படுத்தும் திட்டங்களே அங்கு செயற்படுத்தப்படுகின்றன.
மீள்குடியேற்றம் நடந்த போர் நடந்த எமது பிரதேச சபைகளில் வளப்பற்றாக்குறைகள் நிலவுகின்றன. அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது அவை வினைத்திறனாக செயற்படுவதற்கு காரணமாக இருக்கும் என்றார்.


















