-சொ.வர்ணன்-
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 13 முதியோர் இல்லங்கள் செயற்பட்டு வருகின்றன. அவற்றில் மூன்று முதியோர் இல்லங்கள் இதுவரை பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றன. இவ்வாறு பதிவு செய்யாமல் செயற்படும் முதியோர் இல்லங்கள் மூன்று மாதங்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யத் தவறினால் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி செயற்பாடுகள் இடைநிறுத்தப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் முதியோர் பராமரிப்பு சேவையின் தரநிலைகளை வலுப்படுத்தும் நோக்கிலான மூன்று நாள் பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வு நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதியோர் இல்லங்கள் உடல் பராமரிப்பில் மட்டுமே அல்லாமல் முதியோரின் மனநலத்தையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை உள ஆற்றலூட்டும் சிகிச்சை மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சில முதியோர் இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்களிடமிருந்து மரியாதையற்ற வார்த்தை பயன்பாடு மற்றும் மேலாளர் முன்னிலையில் காணப்படும் நடத்தை – மேலாளர் இல்லாத நேரத்தில் காணப்படும் நடத்தை ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதாக புகார்கள் கிடைத்துள்ளன. இவை குறித்து கடுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும்.
முதியோர் இல்லங்களில் உள்ள முதியோரின் உடல், சமூக மற்றும் மனநலத் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே இப்பயிற்சி பட்டறையின் முதன்மை நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி ஸ்ரெல்பன் பாலகுமாரி கலந்து கொண்டார். பயிற்சிப் பட்டறையின் முதல்நாள் வளவாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி குமாரசுவாமி ஜெகதீஸ்வரன் பங்கேற்றார்.
மாவட்டத்தின் 13 முதியோர் இல்லங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


















