வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சபையின் அனுமதி பெறாத நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் இயங்கவோ செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியாதென வேலணை பிரதேச சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற சபை அமர்வின்போது நுண்கடன் பாதிப்பால் வேலணை மக்கள் மத்தியில் ஏற்படும் அவலங்கள் குறித்து சுட்டிக்காட்டி, குறித்த நுண்கடனை மக்களுக்கு திணிக்கும் நிறுவனங்களை சபையின் ஆளுகைக்குள் தடை செய்ய வேண்டும் என கோரி சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தினால் முன்மொழிவொன்று கொண்டுவரப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப் பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சபை அமர்வின்போது குறித்த தீமானத்தின் செயற்படுத்துகை தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது உரையாற்றிய தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சபையின் உறுப்பினருமான சுவாமிநாதன் பிரகலாதன் அனுமதியற்ற அதிக வட்டி அறவீடு செய்யும் நுண்கடன் நிறுவனங்கள் தடை செய்யப்பட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் 37 இக்கும் அதிகமான நுண்நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவது என்ற போர்வையில் மக்களின் உழைப்பை சூறையாடி வருகின்றன.
ஆனால் 2 நிறுவனங்களே சபையின் அனுமதியுடன் சட்ட ரீதியாக மத்திய வங்கியின் கட்டுப்பாடுகளுக்கிணங்க இயங்குகின்றன. ஏனையவை சட்ட விரோதமான முறையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. இத்தகைய நிறுவனங்கள் பல மத்திய வங்கியின் வரையறையையும் மீறி 30 – 40 வீத வட்டி அறவீடு செய்கின்றன. எனவே கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்த ஆண்டின் ஆரம்பம் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


















