-செ.சுமந்தன்-
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டனர்.
புதுக்குடியிருப்பு – பரந்தன் வீதியில் உள்ள யூதா ஆலயத்திற்கு முன்பாக இருந்து மாவீரர் பெற்றோர் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு சுதந்திரபுரம் சந்தியில் உள்ள நிறோஜன் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைக்கப்பட்ட பந்தலில் நிகழ்வுகள் நடைபெற்றன.

மாவீரர் நினைவான பொதுச்சுடரை மாவீரர்களின் உறவினர்கள் ஏற்றி வைக்க மாவீரர்கள் பொதுப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து பந்தலில் வைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மாணவர்களின் நடன நிகழ்வு, கவிதைகள் என்பன இடம்பெற்று மாவீரர்கள் தொடர்பான நினைவுரையை காந்தறூபன் அறிவுச்சோலையின் பொறுப்பாளராக இருந்த புவியரசன் நிகழ்த்தினார். தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களுக்கு பழமரக் கன்றுகள் வழங்கப்பட்டன.


















