-மணலாறில் இராணுவம், புலனாய்வுப் பிரிவு காடைத்தனம்-
-பா.சதீஸ்-
மணலாறுப் பகுதியில் உள்ள துயிலுமில்லத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணிக் குழுவினரை அங்கு வந்த இராணுவத்தினர் துப்பாக்கியால் தாக்கியுள்ளனர்.
உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் செய்வதற்காக பொதுமக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை சென்று துப்புரவுப் பணிகளை செய்துள்ளனர்.
இவ்வாறு உதயபீடம் மாவீரர் துயிலுமில்லத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தவர்களை சூழ்ந்த இராணுவத்தினரும், அளம்பில் புலனாய்வுப் பிரிவினரும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறிப்பாக அங்கு வந்த இராணுவத்தினர் தமது கைகளில் வைத்திருந்த துப்பாக்கியால் பொதுமக்களை தாக்கி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது:-
ஜனாதிபதி அநுரகுமார கூறியுள்ளார் இறந்த உறவுகளை நினைவு கூறலாம் என்று. ஆனால் இப்படி கூறிவிட்டு மறைமுகமாக உங்கள் புலனாய்வு துறையினரையும், இராணுவத்தினரையும் அனுப்பித் தாக்குவதா? அளம்பில் புலனாய்வுத் துறையினர் எம்மை அச்சுறுத்தி இடையூறு செய்கிறார்கள். மணலாறு துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் படுத்திருக்கிறார்கள். நான்கு நாட்களாக நாம் துயிலுமில்லத்தினை துப்புரவு செய்கிறோம்.
ஜனாதிபதி சொல்வது ஒன்று ஆனால் இங்கு இராணுவத்தினரும், புலனாய்வுத் துறையினரும் செய்வது வேறொன்று. இப்படி செய்வது என்றால் ஏன் இறந்தவர்களை நினைவு கூறலாம் எனக் கூறினீர்கள்? இதற்கு எமக்கு ஒரு தீர்வு வேண்டும் என்றார்.


















