-அநுர அரசின் பாதீடு இவற்றுக்கு என்ன பதில் கூறப்போகிறது?
-பாராளுமன்றில் ஆதாரங்களை சமர்ப்பித்து கேள்வி கேட்ட ரவிகரன்
வசதிகள் அற்ற நிலையில் காணப்படும் வன்னிப் பாடசாலைகளுக்கு அநுர அரசின் பாதீடு என்ன பதில் கூறப்போகின்றது என்று தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்:-
பொதுக்கல்வி நிலைமாற்றத்துக்கான புதிய கல்வி மறுசீரமைப்பில், ஒரு கணினியேனும் இல்லாத, ஒரு திறன் வகுப்பறையேனும் இல்லாத, இணையவசதியற்ற, விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு 2026 இல் நீங்கள் சொல்லும் பதில் என்ன?
வன்னியில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் கல்விச் சமத்துவத்தில், கல்வித்தரத்தில், தனிச்சிறப்பை அடைவதற்கான வாய்ப்பை பெறுவதில் மிகுந்த சவால்களை எதிர்நோக்குகின்றன.
வடமாகாணத்தில் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை ஆரம்பக்கல்வியில் மட்டும் காணப்படுகிறது. அரசின் கலைத்திட்ட நடைமுறையில் முன்பள்ளிக்கல்வி மீதான முறையான மேற்பார்வை இல்லை.
கொரோனா இடர்காலத்தில் கற்றல் தடங்கல் தொடர்பில் 3 ஆம் வகுப்பு மாணவர்களின் எண், எழுத்து தொடர்பாக கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வடமாகாணத்தில் 16 சதவீத மாணவர்களும், கிழக்கு மாகாணத்தில் 25 சதவீத மாணவர்களும் மட்டுமே வயதுக்கேற்ற வாசிப்புத்திறனைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த தரம் – 5 புலமைப்பரிசில் பெறுபேற்றின் முடிவுகளின் அடிப்படையில் இரண்டு பகுதிகளிலும் 35 இலும் கூடிய புள்ளியை எடுத்த மாணவர்களின் சதவீதத்தில் தேசிய அளவிலான 70.43% இலும் குறைவான சதவீதத்தையே வட,கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களும் பெற்றுள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டத்தொடங்கி கிடப்பில் போடப்பட்டு முழுமை அடையாத வகுப்பறைக் கட்டடங்களை கட்டி முழுமைப்படுத்துவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்கள் அரசுக்கு தேவை?
வவுனியா தெற்கில் 10 பாடசாலைகள், மன்னாரில் 5 பாடசாலைகள், வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களில் தலா 2 பாடசாலைகளில் முழுமைப்படுத்தப்படாத கட்டடங்கள் வகுப்பறைத் தேவைகளோடு காணப்படுகின்றன.
மன்னார் கல்வி வலயத்தில் மட்டும் இணைய வசதி அற்று 45 பாடசாலைகள், ஒரு மேசைக்கணினி கூட இல்லாது 26 பாடசாலைகள், 72 பழுதடைந்த மடிக்கணினிகள், 126 பழுதடைந்த வரைபட்டிகைகள், 22 பழுதடைந்த திறன் தளங்கள், 539 பழுதடைந்த மேசைக்கணினிகள்,13 பழுதடைந்த திறன் தொலைக்காட்சிகள் என மொத்தம் 772 கணினிச்சாதனங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மட்டும் மேற்படி வகையில் 522 மேசைக்கணினிகள் அடங்கலாக மொத்தம் 870 இலத்திரனியல் சாதனங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. வவுனியா தெற்கு வலயத்தில் மேற்படி வகையில் 318 மேசைக்கணினிகள் அடங்கலாக மொத்தம் 488 இலத்திரனியல் சாதனங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.
இவ்வாறு ஏனைய மூன்று கல்வி வலயங்களிலும் காலங்கடந்த, பழுதடைந்த, பதிவழிக்கப்படவேண்டிய கணினிகள் ஏராளமாக காணப்படுவதோடு கலைத்திட்ட நடைமுறைக்கான இலத்திரனியல் சாதனத்தேவையும் மிகுதியாக உள்ளது.
100 மாணவர்களுக்கு ஒரு மலசலகூடம் என்ற விதிமுறையில் பாடசாலைகளுக்குரிய மலசலகூடங்களை மட்டுப்படுத்துகின்றீர்கள். 100, 200 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு எவ்வாறு இது பொருந்தும்?
ஒருகாலத்தில் கல்விக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6% கல்விக்கு என போராடிய ஒருவரே இன்று கல்வி அமைச்சராகும் போது அதன் பாதியைக்கூட கல்விக்காக ஒதுக்க இயலவில்லை என்றார்.


















