-தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல் மூலம் அம்பலம்-
-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பல கோடி ரூபா நிதி திணைக்களங்களின் அனுமதி இன்றி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்கள் மூலம் அம்பலமாகியுள்ளது
கிளிநொச்சி இரணமடுகுளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களை இணைந்து 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் 2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பல கோடி ரூபா நிதி முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி பல்வேறு விடயங்கள் அம்பலமாகியுள்ளன. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் வரையான காலப்பகுதிகளுக்கான கணக்கறிக்கைகளின்படி விவசாயிகளிடமிருந்தும் விவசாய அமைப்புகளிடமிருந்தும் பெற்றுக் கொள்ளப்பட்ட பல கோடி ரூபா நிதி திணைக்கள அனுமதிகள் இன்றி முறைகேடாக அதன் பொருளாளர் மற்றும் பதவியில் உள்ளவரால் செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான கணக்குகள் கணக்காய்வாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அதில் மாதாந்த கணக்குகள் தயாரிக்கப்பட்டு நிர்வாக சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
நிதி கையாளுதல் தொடர்பில் உபசட்ட விதியின் 14 ஆவது பிரிவின்படி பத்தாயிரம் ரூபா வரையான நிதியே கையாள்வதற்கு அதிகாரம் உள்ள போதும் தீர்மானங்கள் இன்றி பல கோடி ரூபா நிதி கையாளப்பட்டுள்ளது.
இதேநேரம் 2022 பெப்ரவரி 24 ஆம் திகதி குறித்த அமைப்பின் பதிவு நீக்கப்பட்டுள்ளது என ஆணையாளர் நாயகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள போதும் இதுவரை மீளவும் பதிவு செய்யப்படாமல் சட்ட விதிகளுக்கு மாறாகவே இயங்கி வருகின்றமை, அனுமதிகளின்றி பெருந்தொகை நிதியை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றமை தொடர்பில் மாவட்டத்தில் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

















