-4494 பேர் முகாம்களில்-
–செ.சுமந்தன்-
அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் 42 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியிலேயெ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2000 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 5400 பேர் வரை உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் இருக்கின்றார்கள்.
இந்த கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கவில்லை காரணம் முல்லைத்தீவு மாவட்டம் முற்றாக தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த 28 ஆம், 29ஆம் திகதிகளில் மின்சாரம் தொலைத்தொடர்பு இல்லை.
தற்போது தொலைத்தொடர்புவசதிகள் சீர்செய்யப்பட்டாலும் முழுமையாக தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இயல்புநிலை மிகமோசமாக பதிக்கப்பட்ட நிலையில் அவர்களது வாழ்வாதரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அவை முற்றாக அழிவதற்கான வாய்ப்புக்கள் உள்ளாகியுள்ளது.
மிகமுக்கியமாக மக்களின் போக்குவரத்து பல இடங்களில் தடைப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து முகாம்களில் வசிப்பவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது என்றார்.


















