-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்-
-இ.கலைஅமுதன்-
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்புடன் செயற்படுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.
எலிக் காய்ச்சல் பரவல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த வருடமும் யாழ். மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் தீவிரமாகப் பரவிய எலிக்காய்ச்சல் நோயினால் 8 இறப்புக்கள் ஏற்பட்டன.
யாழ். மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைக்குப் பின்னரே இந்த நோய்ப் பரம்பல் ஏற்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சல் நோயானது ஒரு வகை பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது. எலிகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ளநீர், வயல்நீர், சேற்று நிலங்களில் இக்கிருமிகள் சென்றடைகின்றன. மனிதர்கள் வெள்ளநீரில், வயல் நிலங்களில், சேற்று நிலங்களில் வேலை செய்யும் போது அவர்களின் தோலில் உள்ள புண்கள் அல்லது காயங்கள் மூலம் கிருமிகள் மனித உடலில் உட்செல்கின்றன. இந்நோய் ஏற்படும் போது கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி, கடுமையான தலையிடி, இருமல், கண்கள் செந்நிறமாதல், வாந்தி, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
இதனால் மனித உடலில் சிறுநீரகம், சுவாசத்தொகுதி, இதயம், ஈரல், மூளை போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு மரணத்தை ஏற்படுத்தும்.
இந்நோயிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வயல், சேற்று நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகள் கடல்நீரேரிகளில் மீன்பிடிப்பவர்கள் உடலில் காயங்கள் அல்லது புண்கள் இருப்பின் அவற்றை நீர் உட்புகாத வகையில் கட்டுப்போடுதல் வேண்டும். வெள்ளநீரில் அல்லது அசுத்தமான நீரில் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கால், கைகளுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும். வெள்ளநீரில் அவசியமின்றி விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வயல்களில், சேற்று நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளும், கடல்நீரேரி மீன்பிடித்தொழிலாளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை உங்களது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் பெற்றுக்கொள்வது பாதுகாப்பானது. என்றார்.


















