-யாழ். பல்கலை புவியியல்துறை தலைவர் பிரதீபராஜா-
மீண்டும் ஒரு புயல் வருமா எனப் பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சுழற்சியோ இல்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
ஆனாலும் எதிர்வரும் ஜனவரி இறுதிப்பகுதி வரை வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அது வரைக்கும் இடையிடையே மிதமான, கனமான மற்றும் மிகக் கனமழைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதனை நினைவில் கொள்க.
இடைப்பட்ட காலத்தில் ஏதாவது தீவிர வானிலை நிகழ்வுகள் இடம்பெறும் வாய்ப்பிருந்தால் உரிய காலத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அது வரை தேவையற்ற வதந்திகளைப் புறந்தள்ளுங்கள்.
டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து சென்னைக்கு கிழக்காக 60 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
டிட்வா புயல் இன்னும் கரையைக் கடக்கவில்லை என்பதனால் வடக்கு மாகாணக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார்.


















