-செ.ரவிசாந்-
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் திருக்கார்த்திகை உற்சவம் இன்று புதன்கிழமை காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ளது.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு காலைச் சந்திப் பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்தமண்டபப் பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதி உலா வரும் காட்சி இடம்பெறவுள்ளது.
மாலை 4 மணிக்கு சாயரட்சைப் பூஜையைத் தொடர்ந்து இரண்டாம் காலப் பூஜை, வசந்த மண்டபப் பூஜை என்பன இடம்பெற்று வள்ளி – தெய்வநாயகி சமேதரராக முத்துக்குமாரசுவாமி உள்வீதியில் வலம் வந்து கைலாச வாகனத்தில் எழுந்தருளுவார்.தொடர்ந்து ஆலய முன்றலில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு உஷக்காலப் பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகம், காலைச்சந்திப் பூஜை, வசந்தமண்டபப் பூஜை என்பன இடம்பெற்று சுவாமி வீதி வலம் வரும் திருக்காட்சி இடம்பெறவுள்ளது.
இதனை தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு சண்முகார்ச்சனை, உச்சிக்காலப் பூஜை இதன் பின் மகேஸ்வர பூஜை என்பன நடைபெறவுள்ளன.
மாலை 4 மணிக்கு 108 சங்காபிஷேகம், சாயரட்சைப் பூஜை, சண்முகார்ச்சனை, இரவு 7.20 மணியளவில் இரண்டாம் காலப் பூஜை, இரவு 7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூஜையைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா வந்து சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
















