-அதிகாரிகள் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் கோரிக்கை-
-சொ.வர்ணன்-
டித்வா பேரிடரினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை தூய்மையாக்க அரசாங்கம் ஒதுக்கிய 25 ஆயிரம் ரூபாய் நிதியை பெறுவதற்கான பயனாளிகள் தெரிவு யாழ். மாவட்டத்தில் முறையாக இடம்பெற்றுள்ளதா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அரசாங்கம் பேரிடரினால் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பும்போது வீடுகளில் வெள்ளம் தேங்கியதால் ஏற்பட்ட அசுத்தங்களை அகற்றி வீட்டை தூய்மையாக்குவதற்கும், வீட்டு சுற்றாடலை தூய்மையாக்குவதற்கும் 25 ஆயிரம், ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரத்து 459 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3361,475,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இடத்தங்கல் முகாம்களில் இருந்த மக்களின் அதிகபட்ச எண்ணிக்கை 5443 பேர் மட்டுமே. அது கடந்த 1ம் திகதி பதிவாகியுள்ளது. அதேசமயம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 1ம், 2ம் திகதிகளில் அதிகரித்து அதிகபட்சமாக 16943 ஆக பதிவாகியுள்ளது.
அதேசமயம், 30ம் திகதிக்குப் பின்னர் மாவட்டத்தில் அதிகபடியான மழைவீழ்ச்சி பதிவாகாததுடன், 29ம் திகதி டித்வா புயல் இலங்கையை விட்டு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேசமயம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த காலத்தை விடவும், மழைவீழ்ச்சி குறைவாக உள்ளது. 25ம் திகதி 39.5 மில்லிமீற்றர் மழையும், 26ம் திகதி 1.6 மில்லிமீற்றர் மழையும், 27ம் திகதி 32 மில்லிமீற்றர் மழையும், 28ம் திகதி 107.7 மில்லிமீற்றர் மழையும், 29ம் திகதி 65.8 மில்லிமீற்றர் மழையும், 30ம் திகதி 2.6 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளன.
இதற்குமேல் யாழ்ப்பாணத்தில் ஆறுகளோ, குளங்களோ இல்லை. அதனால் திடீர் வெள்ளப்பெருக்கு அபாயங்களும் இல்லை. மறுபக்கம் 2024ம் ஆண்டுக்கான குடிசன மதிப்பீடுகளின் படி நெடுந்தீவில் 893 குடும்பங்கள் இருந்ததாக கூறப்பட்டிருக்கும் நிலையில், இப்போது பயனாளிகள் பட்டியலில் 1216 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சில தகவல்களை அடிப்படையாக கொண்டு சமூக ஊடகங்களிலும், பொதுவெளியிலும் பொதுமக்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத கிராமசேவகர்கள் சிலரை தொடர்பு கொண்டு கேட்டபோது பயனாளி தெரிவு தொடர்பில் குழப்பங்கள் உள்ளன அவர்கள் கூறியபோதும் எவ்வாறான குழப்பங்கள் எனக் கூற மறுக்கின்றனர். ஆனால் பயனாளிகளுக்கு வங்கி ஊடாகவே பணம் கொடுக்கப்படவுள்ளதால், அதில் முறைகேடு சாத்தியமேல்லை என கூறுகின்றனர். அதேசமயம் பயனாளிகள் விபரம் தொடர்பான பட்டியல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதுடன், பொதுமக்கள் பலர் அதனை பிரதி எடுத்து கைகளிலும் வைத்திருந்த நிலையில், அதன் உண்மைத்தன்மை தொடர்பில் மாவட்டச் செயலகம் எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் எழுந்துள்ள சந்தேகங்கள், மற்றும் குழப்பங்களுக்கு மாவட்டச் செயலகம் பதிலளிக்கவேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
















