நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திலும் மத்திய அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு – செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்:-
நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படும்போது அதுதொடர்பில் விரைவாக செயற்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்களில் போதுமான உறுப்பினர்கள் இல்லை. மாவட்ட மத்திய நிலையங்களில் 4,5 பேர் இருக்கின்றனர்.
2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம், மாகாண மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் 20 வருடமாகியும் அது இன்னும் அமைக்கப்படவில்லை. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தால், இந்த அனர்த்தத்தை குறைத்துக்கொண்டிருக்கலாம்.
அத்துடன் மாகாணத்துக்கு ஒரு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும். அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் மத்திய அரசாங்கத்துக்கு கீழ் செயற்படுவதால், இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும்போது, இந்த மத்திய நிலையங்களை அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையாக எடுத்துக்கொள்ள முடியும்.
மேலும் இந்த அனர்த்த சம்பவம் இடம்பெற்றபோது, மாவட்ட செயலாளருக்கு மாகாண செயலாளரை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தொலை தொடர்புகள் செயலிழந்திருந்தன. அதனால் மாவட்ட செயலாளருக்கும் மாகாண செயலாளருக்கும் இடையில் ஒரு வானொலி தொடர்பாடல் முறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
ஏனெனில் இந்த நாட்டில் சுனாமி அனரத்தத்திற்கு பின்னர் நாட்டில் 77 அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இதில் ஒன்றுகூட இடம்பெற்ற அனர்த்தத்தின்போது இயங்கவில்லை. அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


















