-மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடத்த அரசுக்கு அழுத்தம் : சுமந்திரன்
-இ.கலைஅமுதன்-
மாகாணங்களுக்கு மாகாணங்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் அதிகாரம் கையிலே போய்ச்சேர வேண்டும். அதற்காக மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும் என அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதாக தீர்மானம் எடுத்திருப்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி இடையிலான சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய சூழலில் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களை எப்படி நாங்கள் முகம் கொடுப்பது, முக்கியமான விடயங்களில் இணைந்து செயல்படுவது பற்றி நீண்ட கலந்துரையாடலொன்றை நாம் நடத்தினோம். இதன்போது இரண்டு முக்கிய விடயங்களை பேசினோம்.
முதலாவது, மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் பிற்போடப்படும் சூழ்நிலையில் அதிகாரப் பகிர்வை கோரும் நாங்கள் அதனை விட்டுக் கொண்டு செல்ல முடியாது. மிக விரைவில் மாகாணங்களுக்கு மாகாணங்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசியல் அதிகாரம் கையிலே போய்ச் சேர வேண்டும். அதற்காக மாகாண சபைத் தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை நாங்கள் சேர்ந்து கொடுப்பதாக தீர்மானம் எடுத்திருக்கிறோம்.
இரு தரப்பினரும் செய்து கொண்டிருக்கிற விடயத்தை சேர்ந்து செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளோம்
தமிழ் மக்களுக்கான நீதியான நியாயமான அரசியல் தீர்வு சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே சேர்ந்த தரப்புகள் என்ற ரீதியிலும் பழைய சரித்திர விடயங்களை பலவற்றை அடைந்திருக்கிறோம். இது தொடர்பாக ஒருமித்த நிலைப்பாட்டை நாங்கள் வெளிக்கொண்டு வருவதற்கான தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்துவதாக தீர்மானித்திருக்கிறோம் என்றார்.
















