-க.சபேஷன்-
சீரற்ற காலநிலையினால் புத்தளத்திலுள்ள 600க்கு மேற்பட்ட இறால் பண்ணைகள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றை ஆய்வு செய்யுமுகமாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று புத்தளத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின் போது அமைச்சர் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் பண்ணையாளர்களை சந்தித்து எதிர்கொண்ட சேதங்கள், உடனடி தேவைகள் மற்றும் எதிர்கால குறைகள் தொடர்பாக விரிவாக கேட்டறிந்தார்.
இந்நிலையில் எதிர்காலத்தில் கடற்றொழில் துறையை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் விவரித்தார்.
அத்துடன் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை விரைவில் மீண்டும் தொடங்கும் வகையில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து அமைச்சர் உடப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள கடலரிப்பை பார்வையிட்டு தடுப்பணை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், அதன் ஆரம்ப திட்டங்களையும் மக்களிடம் குறிப்பிட்டார்.
அமைச்சரின் விஜயத்தில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் கித்சிரி தர்மபிரிய உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


















