அனர்த்த நிவாரணம் தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகள் தேர்தல்கால விசித்திர வாக்குறுதிகளின் இரண்டாம் பாகம் என கூறியுள்ள ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி அறிவித்துள்ள நட்ட ஈட்டுத் தொகையை வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு 300 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. ஆனால் அரசாங்கத்தின் கைவசம் இருப்பது 120 பில்லியன் ரூபாய் மட்டுமே எனவும் கூறினார்.
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அனர்த்தம் எமக்கு தெரிந்த காலத்தில் இருந்து இந்தளவு பாரிய அனர்த்தம் ஏற்பட்டதில்லை.
நாட்டு மக்களில் நூற்றுக்கு 10 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மற்றும் காணாமல் போயுள்ளவர்களின் சரியான தொகை இதுவரை கணக்கிட முடியாமல் போயிருக்கிறது. நாளுக்கு நாள் மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களுக்கு
நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. அதேநேரம் பாதிப்புகளுக்கு அமைய எவ்வளவு தொகை நட்டஈடாக வழகப்போகிறோம் என்ற அளவையும் ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஜனாதிபதி அறிவித்த பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படுமாக இருந்தால், அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அறிவித்துள்ளதன் பிரகாரம் நட்டஈடு வழங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இருக்கிறதா என்பதே எமக்குரிய கேள்வியாகும். ஏனெனில் ஜனாதிபதி அறிவித்த தொகையை பார்க்கும்போது மரணித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகள், விவசாய நிலங்கள் கால்நடை பண்ணைகள், வியாபார நிலையங்கள், வாகனங்கள் என அனைத்துக்குமாக மொத்தம் 300 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் தேவைப்படுகிறது என்றார்.


















