-யாழில் மீனவர்கள் பெரும் போராட்டம்-
-கஜிந்தன், இ.கலைஅமுதன், வி.சரவணன்-
எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் முன்பாகப் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நேற்று காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம் காரணமாக, பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் இலங்கையின், குறிப்பாக வடக்குக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப் படகு மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மீனவ அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அரசாங்கம் இது தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனால், தமது கடல் வளங்கள் சூறையாடப்படுவதாகவும், தமது வாழ்வாதாரம் முடக்கப்படுவதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள், தமக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் எனக் கோரியே நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு யாழ். மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் வருகைதந்து மீனவப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதன்போது, மீனவர் பிரதிநிதிகளால் மாவட்டச் செயலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















