-வடக்கு மீனவர்கள் போராட்டத்தில் கொந்தளிப்பு-
-சொ.வர்ணன்-
இந்திய இழுவைப் படகுகளால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்ற நிலையில் இந்தியா அரசு கண்டும் காணாமல் செயல்படுகிறது. இந்திய அரசு தொடர்ந்தும் இவ்வாறு செயல்படுமானால் யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அகற்றக்கோரி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் முன்பாகப் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மீன்பிடி நீரியல் வளத் திணைக்களத்துக்கு முன்னால் மீனவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அங்கிருந்து பேரணியாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஒன்றுதிரண்டனர்.
அங்கு கருத்து வெளியிட்ட போதே மீனவர்களே இவ்வாறு தெரிவித்தனர்.
இதன்போது அவர்கள் மேலும்,
இந்தியா மீனவர்களால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்ற நிலையில், இந்தியா அரசு கண்டும் காணாமல் செயல்படுகிறது. இந்திய அரசு இவ்வாறு செயல்படுமானால் யாழில் உள்ள இந்திய தூதரகத்தை அகற்றி சீன மற்றும் அமெரிக்க தூதரகத்தை அமைப்பதே சிறந்தது.
இந்தப் போராட்டத்தில் சுமார் 2000 மீனவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்திருக்கும் நிலையில் இனி ஒரு போராட்டம் இடம்பெறுமானால் யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரகம் வேண்டாம் என்ற போராட்டமே இடம்பெறும்.
தொடர்ந்தும் எமது வளங்களை அழித்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை இழுவைப்படகுகள் அழிப்பதற்கு இந்தியா துணை போகுமானால் 10000 பேரைத் திரட்டி இந்தியத் துணைத்தூதரகத்தை அகற்றுமாறு கோரி போராடுவோம் எனவும் தெரிவித்தனர்.
















