-வடக்கு மீனவர்களை அதட்டும் அநுரவின் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர்-
-இந்திய தூதரகத்தை அகற்றக் கோரியவரும் அமைச்சரின் அமைப்பாளர்தானாம்-
-உண்மைகளை போட்டுடைத்த வடக்கு கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகள்-
-இ.கலைஅமுதன், சொ.வர்ணன்-
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த அமைச்சரிடம் கோரினால் இந்திய தூதரகத்தை முற்றுகையிடுங்கள் என்று சொல்கின்றாரே தவிர வேறு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அவர் எடுப்பதில்லை என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டினர்.
யாழில் இடம்பெற்ற மீனவர்கள் போராட்டத்தில் இந்திய தூதரகத்தை அகற்றுமாறு கூறிய நபர் ஆளும் கட்சியின் கடற்றொழில் அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளராக கூறிக்கொள்ளும் விஜய் என்பவரே. அவரின் கருத்து வடக்கு மீனவர்களின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு அரங்கில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-
அத்துமீறும் இந்திய இழுவை படகுகளினால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக துன்பங்களை அனுபவித்து வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.
இந்தியா மீனவர்களின் அத்துமீறலைல்களை கட்டுப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடமும், யாழ். இந்திய துணைத் தூதரகத்திடமும் பலமுறை கடிதங்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் கேட்டிருக்கிறோம்.
ஆனால் மீனவர்களின் வருகை தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடற்றொழில் அமைச்சர் பொறுப்பேற்று வந்த பின்னர் 4 மாவட்டங்களும் இணைந்து சகல பிரச்சினைகளையும் அடங்கிய மகஜர் கொடுக்கப்பட்டது. மீனவர்களின் பாதிப்புக்கள் தொடர்பில் அவருக்கு நன்கு விளங்கப்படுத்தப்பட்டது.
உடனடியாக இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். இன்று வரைக்கும் வடக்கின் நான்கு மாவட்டத்தினரை சந்தித்ததும் இல்லை. பிரச்சினைகளுக்கான பதிலையும் தரவில்லை. நாங்கள் கேட்டால் இந்திய தூதரகத்தை முற்றுகை இடுங்கள் என சொல்கின்றார்களேயொழிய எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் அவர் எடுத்ததில்லை.
இவ்வாறான ஒரு நிலையில் கடந்த வாரம் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கோரி யாழில் மீனவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்த நிலையில் அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தாக காணப்படுகிறது.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் யாழ்.இந்திய துணைத் தூதரகத்தை அகற்றுவோம் என கூறிய கருத்து ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இந்த கருத்தினை தெரிவித்தவர் கடற்றொழில் அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளராக கூறிக்கொள்ளும் விஜய் என்பவரே.
இந்தப் போராட்டம் அனைத்து மீனவ அமைப்புகளையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்ட போராட்டம் அல்ல. அதனால் இந்த போராட்டத்திற்கு நாங்கள் கலந்துகொள்ளவில்லை.
ஒரு அரசியல் கட்சியின் பின்னணியிலேயே குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அரசியல் கட்சியின் பின்னணி இயங்குகின்ற ஒருவர் இந்தியா தூதரகத்தை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது சீனா மற்றும் அமெரிக்கா தூதரகங்களை கொண்டு வர வேண்டுமெனவும் கூறுகிறார்.
இந்தியா தூதரகம் அகற்றப்பட்டால், தமிழ் மக்கள்தான் அதனால் பாதிக்கப்படுவார்கள். அதற்காக இந்தியா எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் விடயத்தில் தொடர்ந்தும் மௌனமாக இருக்கக் கூடாது. அதற்குரிய இராஜதந்திர நீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் இலங்கை அரசாங்கம் அதன் கடற்படை சரியாக கடலை பாதுகாத்தால் இவ்வாறு இந்தியா மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் ஆத்துமீறி நுழைய முடியும்.
இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இந்திய அரசாங்கத்தை விட இலங்கை அரசாங்கமே தமது மீனவர்களையும் கடலையும் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
















