-க.கனராசா-
டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.
பருத்தித்துறை நகரசபை, அல்வாய், பொலிகண்டி பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 30 வீட்டின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் மற்றும் பொலிகண்டி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட 19 குடியிருப்பாளர்களுக்கும், அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 9 குடியிருப்பாளாகளுக்கும், பொலிகண்டி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் இரு குடியிருப்பாளாகளுக்கும், எதிராக கடந்த வெள்ளிக்கிழமை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஷ், அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் க.கிருஸ்ணரட்சகன் மற்றும் பொலிகண்டி பொதுச்சுகாதார பரிசோதகர் ம. நந்தகுமார் ஆகியோரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து ஆதன உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், நீதிமன்றத்தினால் தலா 10,000 ரூபா தண்டப்பணம் வீதம் 300,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















