-க.கனகராசா-
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் உணவு கையாண்ட சுண்டல் வியாபாரிகளுக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய சூழலில் உடல்நலத் தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவு கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, திண்மக் கழிவுகளை ஆலய சுற்றாடலில் கொட்டியமை போன்ற சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிகாதது தொடர்பாக காரம் சுண்டல் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டவர் தொடர்பாக வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் ப. தினேஷிற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
உடனடியாகவே அவ்விடத்திற்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட பொதுச்சுகாதார பரிசோதகர் குறைபாடுகளை இனங்கண்டு, குறித்த காரம் சுண்டல் வியாபாரிக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதை அடுத்து, வியாபாரி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அவருக்கு நீதிமன்றத்தினால் 30,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது.
















