-வலியுறுத்திய ஈ.பி.டி.பி. தரப்பினர்-
இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பானது யாழ். இந்திய துணைத் தூதுவராலயத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியா வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.
அதேநேரம் கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் தமது மனவருத்தத்தினையும் வெளிப்படுத்தினர்.
எமது வளங்களை அழிக்கின்ற இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட நியாயமான போராட்டத்தினுள் நுழைந்த சிலர், இந்தியத் துணைத் தூதராலயத்தினை மூடுவது தொடர்பாக வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் ஈ.பி.டி.பி. தரப்பினரால் வலியுறுத்தப்பட்டது.
அதேபோன்று, கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி. அரசாங்கங்களில் பங்கெடுத்து செயற்பட்ட வேளையிலும், இந்தியாவுடனான உறவுகளைப் பேணுவதிலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாமல் செயற்படுவதிலும் கவனம் செலுத்தியமையை பல்வேறு உதாரணங்களுடன் ஈ.பி.டி.பி. பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.
பூகோள அரசியல் விவகாரத்தில் இந்தியாவே எமது முதல் தெரிவு என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வெளிப்படையாக தெரிவித்து வந்ததுடன், செயற்பாடுகளிலும் அந்த நிலைப்பாட்டினை இறுக்கமாக பின்பற்றி வருவதாகவும், குறிப்பாக தம்மால் முன்னெடுக்கப்பட்ட கடலட்டை பண்ணை விஸ்தரிப்பின் போதும் இந்திய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கரிசனையுடன் செயற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
குறித்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் மேலும் கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
















