மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும் மக்களை அன்போடு வரவேற்பதற்கும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவே நாம் குறிப்பிட்டோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அண்மையில் கண்டிக்கும் கம்பளைக்கும் விஜயம் மேற்கொண்ட தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம் எனவும், தற்போது மனோகணேசனும் மலையக மக்களும் அதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், அம்மக்களை மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்பதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், மலையகம் எமது தாயகமெனவும் நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்குத் தயாரில்லையெனவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பொது செயலாளர் சுமந்திரன், மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும் மக்களை அன்போடு வரவேற்பதற்கும், அவர்களுக்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவே நாம் குறிப்பிட்டோம் என விளக்கமளித்தார்.
அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் சிலர் அவர்களது காணிகளை வழங்குவதற்கான விருப்பத்தை தம்மிடம் வெளிப்படுத்தியுள்ள நிலையில் சுயவிருப்பின்பேரில் வட, கிழக்கில் குடியேற விரும்பும் மலையக மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்குவதற்கும், அவர்களது விவசாயம், பயிர்ச்செய்கை உள்ளிட்ட அவர்களது வாழ்வாதாரத்துக்கு அவசியமான அரச காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

















