-செ.சுமந்தன், பா.சதீஸ்-
கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார்.
முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியின் சின்னராசா லோகேஸ்வரன் கடந்த ஆறாம் மாதம் வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதம் தவிசாளர் பதவியினை விலகியதைத் தொடர்ந்து வெற்றிடமாக காணப்பட்ட தவிசாளரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நேற்று திங்கட்கிழமை வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
21 உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக் கூட்டத்தில், தவிசாளர் தெரிவு இரகசியமுறையிலா? வெளிப்படையாகவா? என்ற நிலைக்கான வாக்கெடுப்பில் 13 உறுப்பினர்கள் இரகசியமான முறையில் வாக்கெடுப்பினை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதை தொடர்ந்து தவிசாளர் தெரிவிற்கான முன்மொழிவு இடம்பெற்றது.
இந்நிலையில் தவிசாளராக தமிழரசு கட்சி சார்பில் மிக்கேஸ்பிள்ளை ஜோன்சன் மோகனராஜாவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் தொம்பைப்பிள்ளை பவுள்ராவும், தேசியமக்கள் சக்தி சார்பில் இமக்குலேற்றா புஸ்பானந்தன் முன்மொழியப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் இமக்குலேற்றா புஸ்பானந்தன் 10 வாக்குகளையும், தொம்பைப்பிள்ளை பவுள்ராஜ் 6 வாக்குகளையும், ஜோன்சன் மோகனராஜா 5 வாக்குகளையும் பெற்றனர்.
பெரும்பான்மை வாக்குகள் பெறாத நிலையில் குறைந்த வாக்கினை பெற்ற தமிழரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டவர் நீக்கப்பட்டு, இரண்டாம் தடவையாக இமக்குலேற்றா புஸ்பானந்தன், தொம்பைப்பிள்ளை பவுள்ராஜ் ஆகியோருக்கு இடையிலான போட்டி இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டது.
இதில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இமக்குலேற்றா புஸ்பானந்தன் 14 வாக்குகளையும் தொம்பைப்பிள்ளை பவுள்ராஜ் 7 வாக்குகளையும் பெற்றார்.
இதன்பின்னர், உள்ளுராட்சி ஆணையாளரால் புதிய தவிசாளராக தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் அறிவிக்கப்பட்டார்.


















