இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி பிரதேசத்தக்கு குடிதண்ணீர் பெற்றுக் கொள்வதற்கான ஒப்புதல் கடிதத்தை மாவட்ட அரச அதிபரிடம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் கையளித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் குடிதண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை கிளிநொச்சி குளத்திலிருந்து நீரைப் பெற்று சுத்திகரித்து மக்களுக்கு வழங்குகின்றது.
கிளிநொச்சி குளத்தின் நீரின் தரம் மழை காலங்களில் குறைவாக காணப்படுகின்ற நிலையில் இரணைமடு குளத்திலிருந்து நீரைப் பெற்றுக் கொள்வதற்கு இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர்,பொறியியலாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து மூன்று இடங்களை அடையாளம் காணப்பட்டது.
கிளிநொச்சி குளம் வான் பாய்கின்ற பகுதி, கோவிந்தன் கடை சந்தி, தற்போது திருவையாறு ஏற்று நீர்ப்பாசனம் இயங்கி வருகின்ற பகுதி என்பவற்றை அடையாளம் காட்டி அதற்கான ஒப்புதலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கடிதமாக கையளித்தனர்.


















