-எழுகை அமைப்பின் தலைவர் ரூபன்-
-த.சுபேசன்-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 19 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கி ஆயிரத்து 200 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ரூபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடையார்கட்டு கிராம சேவகர் பிரிவில் தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எதனால் இவ்வாறு ஆனார்கள் என்று இங்குள்ள அனைவருக்கும் தெரியும். தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பின் நிறுவுனரும் இதனை நன்கு அறிந்தவர். எமது மண்ணின் வடுக்களையும், துன்பங்களையும், துயரங்களையும் அறிந்தவர்கள் பலர் புலம்பெயர் தேசங்களிலிருந்து இவ்வாறான உதவிகளை முன்னெடுக்கின்றனர். அதுபோன்றே தனது சகோதரர்கள் நினைவாக இலக்கியா-தென்றல் அமைப்பு ஊடாக தாயக உறவுகளுக்கு அவர் உதவி வருகின்றார்.
தாயக மக்களின் நிலை உணர்ந்து உதவுபவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். முல்லைத்தீவில் பல மாற்றுத்திறனாளிகள் உள்ள போதிலும் அனைவருக்கும் ஒருமித்து உதவி வழங்க முடியாத நிலைமையில்தான் நாம் இருக்கின்றோம். இருப்பினும், உடையார்கட்டு கிராம அலுவலர் பிரிவில் உள்ள 130 மாற்றுத்திறனாளிகளுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பு ஒருமித்து உதவித் திட்டம் வழங்கியுள்ளது.
இந்த உதவியை வழங்கிய இலக்கியா தென்றல் அமைப்பிற்கும், அதன் நிறுவுனர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எழுகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பாராட்டுக்கள் என மேலும் அவர் தெரிவித்தார்.


















