கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 8.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை நாட்டிற்குள் கடத்த முயன்ற மூன்று வர்த்தகர்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
விமான நிலையத்தில் உள்ள வருகை முனையத்தின் ‘கிரீன் சேனல்’ பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நீர்கொழும்பைச் சேர்ந்த 58 வயது வர்த்தகர் ஒருவரும், பண்டாரவளையைச் சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பெண் வர்த்தகர்களும் அடங்குகின்றனர்.
கிரீன் சேனல் வழியாக சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற இரண்டு பெண்களை சுங்க அதிகாரிகள் கவனித்துள்ளனர். அவர்களில் ஒருவரை உடல்நலக் குறைவு உள்ளவராக காட்டுவதற்காக சக்கர நாற்காலியில் அமர்த்தி, மற்றொருவர் தள்ளிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் துபாயிலிருந்து 8D – 822 என்ற விமான சேவை மூலம் இரவு 12.30 மணிக்கும், தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து FD – 140 என்ற விமான சேவை மூலம் அதிகாலை 1.00 மணியளவிலும் கட்டுநாயக்கே விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சந்தேகநபர்களின் பயணப் பைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் 220 கார்டன்கள் (44,000 ஸ்டிக்குகள்), வெளிநாட்டு மதுபானம் 19 போத்தல்கள், சுகாதார அமைச்சகம் அல்லது தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்படாத அழகுசாதன பயன்பாட்டிற்கான ‘கொலாஜன்’ 430 பொதிகள், காலணிகள் உள்ளிட்ட பிற வணிகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தற்போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.


















