வவுனியா, வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 21 ஆம் திகதி வீரபுரம் பகுதியில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலின்போது தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யோ. அபிசாந் என்ற இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த செட்டிகுளம் பொலிஸார் மூவரை கைது செய்தனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து இந்த கொலை நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


















