-பா.சதீஸ்-
முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு பிள்ளைகளை சிகிச்சைக்காக கொண்டு செல்ல பயமாக உள்ளது என்று, குறித்த வைத்தியசாலையால் பாதிக்கப்பட்டவரின் சகோதரி குற்றம் சுமத்தியுள்ளார்.
உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவு மக்களால் மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குற்றம் சுமத்திய அந்த பெண் மேலும் தெரிவிக்கையில்:-
வீதி விபத்தினால் காயமடைந்த எனது 27 வயதுடைய எனது சகோதரரை சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றோம். மூன்று மாதமாக கை முறிந்ததாக கூறி பீஓபி போட்டிருந்தார்கள். ஆனால் கை முறியவில்லை. கைக்கு வரும் நரம்பு அறுந்திருந்தது. ஆனால் அதனை கண்டுபிடிக்க முடியாமல் முறிவென கூறி பீஓபி போட்டிருந்தார்கள். அதனால் சகோதரரின் கை பாரிசவாதமாக வந்துவிட்டது.
வவுனியாவில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று எலும்பு முறிவு வைத்தியரிடம் காட்டிய போது வைத்தியர் பார்த்து விட்டு கூறினார் இது எலும்பு பிரச்சினை இல்லை நரம்பு பிரச்சினை என்று. இவ்வாறானால் இங்குள்ள வைத்தியருக்கு அது தெரியாதா? இதன் பின்னர் நரம்பு வைத்தியரிடம் கொண்டு சென்று காட்டிய போது நாங்கள் கொண்டுவர தாமதமாகிவிட்டதென கழுத்திலிருந்து முழங்கை வரை வரும் நரம்பு அழுகிவிட்டதென. தற்போது தம்பி வலது கையினால் சாப்பிட முடியாமலும், வாழ்க்கை இல்லாமலும் உள்ளார். எனக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். மாஞ்சோலை வைத்தியசாலைக்கு பிள்ளைகளை கொண்டுவர பயமாக இருக்கிறது என்றார்.


















