அமெரிக்காவினால் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுதந்திரமான, இறைமையுள்ள நாடான வெனிசுலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கடத்திச் சென்று, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்புத் தலையீட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உலகின் எந்தவொரு சுதந்திர, இறைமையுள்ள நாட்டைப் போலவே வெனிசுலாவினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறைமை அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கே உரியது. அதனை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை இல்லை.
அமெரிக்காவினால் வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான இராணுவத் தலையீட்டை உலகில் எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
எனவே, அமெரிக்கா வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொண்ட இந்த இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரான நாம், வெனிசுலாவின் இறைமை மற்றும் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனவும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















