-சி.ஜெகதீஸ்வரன்-
நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கனடா பிரஜையான பரமநாயகம் திவாகர் (வயது- 42) என்பவராவார்.
மேற்படி குடும்பஸ்தர் கனடாவில் வசித்து வந்த நிலையில், வட்டுக்கோட்டையில் உள்ள தாயார் வீட்டுக்கு கடந்த மாதம் வந்திருந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இம்மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணை மேற்கொண்டார். சாட்சிகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத சோதனையில் நிமோனியா தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.


















