-செர்ணலிங்கம் வர்ணன்-
-மல்லாகம் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட் பொலிஸ் அராஜகங்கள்
-பொலிஸாருக்கு சட்ட ரீதியான சாட்டையடி கொடுத்த சட்டத்தரணிகள்
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது பொலிசார் பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்தமை அடிப்படை மனித உரிமைகள் மீறல்களை தாம் செய்யாமல் நீதிமன்ற கட்டளைகள் மூலம் நிறைவேற்றும் உத்தி என சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரன் மன்றுக்கு சுட்டிக்காட்டினார்.
நேற்று திங்கட்கிழமை மல்லாக நீதிமன்றத்தில் தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது குற்றவியல் நடைமுறை, கோவை (106) மற்றும் (81) ன் கீழ் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் போராட்டக்காரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைக்கும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
அவர் தனது சமர்ப்பணத்தில் 2010 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலாவது காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சார்பாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கில் அப்போதைய யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தனது கட்டளையில் பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாது என உத்தரவிட்டார். அதேபோல் மேலும் பல நீதிமன்றங்கள் பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாது என்ற தீர்ப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆர்ப்பாட்டங்கள் கலவரமாகும் போது பொலிஸ் கட்டளை சட்டம் பிரிவு (54) கீழ் பொலிசார் நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் இருக்கும் நிலையில் தையிட்டி விவகாரத்தில் பொது தொல்லை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் என்ன என மன்றில் கேள்வி எழுப்பினார்.
2023 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சிவிலியன் ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட ஒழுங்கைப் பேனுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி கையேட்டில் பொலிஸார் ஆர்ப்பாட்டம் ஒன்றை சமரசத்தில் முடிவுறுத்த வேண்டும் என்ற எடுகோலிலே பார்க்க வேண்டும்.
ஆர்ப்பாட்டங்களில் கலவரங்கள் ஏற்படும் என பொலிஸார் கருதினால் பொலிசாரே அதற்குரிய ஆதாரங்களை நீதிமன்றுக்கு கொண்டுவர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்களால் இதுவரை கலவரங்கள் ஏற்படுத்தப்படாத நிலையில் என்ன ஆதாரத்தின் அடிப்படையில் பொலிஸார் பொதுத் தெல்லை சட்ட ஏற்பாடுகளில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் தனது சமர்ப்பணத்தில் தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொலிஸாரால் பொறப்பட்ட நீதிமன்றக் கட்டளை 14 நாட்களை கடந்த நிலையில் வலுவிழந்த கட்டளையை சட்டத்தின்பால் நீடிக்க முடியாது.
தையிட்டி போராட்டக்காரர்கள் மீது பொலிஸாரால் பெறப்பட்ட கட்டளை பிரதிவாதிகளை அழைக்காமல் ஒரு தரப்பு சார்பான கட்டளை என்பதால் பிரிவு 106 (4) இன் கீழ் கட்டளையை நீக்க முடியும்.
மேலும் வழக்காளிகளாக நீதிமன்றத்தில் தோன்றியவர்கள் மீது இரண்டுக்கும் மேற்பட்ட வழக்குகளை பொலிசார் தாக்கல் செய்ததன் மூலம் பிணை வழங்கும்போது பிணையாளிகளை தேடுவதற்கான அசொளகரியங்களை ஏற்படுத்துவதுடன் போராட்ட ஓர்மத்தை குறைப்பதற்கான பொலிஸாரின் உத்தியே என மன்றில் தனது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
அதேபோல் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமர்ப்பனத்தை முன்வைக்கும் போது:-
அமைதிவழியான ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு இலங்கை அரசியலமைப்புடன் தீர்க்கப்பட்ட பல வழக்குகளிலும் உரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் அப்படியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் அந்த தீர்ப்புகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்ற போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அனுசரணையாக பொலிசார் உதவி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த 106 ஆம் பிரிவின் கீழே எடுக்கப்படுகின்ற கட்டளைகள் முறையான கட்டளை அல்ல. அதாவது சில சில விடயங்கள் சம்பந்தமாக, வீதிக்கு குறுக்கே மரம் விழுந்திருந்தால், ஓடுகிற நீர் பாதையை யாராவது மறித்திருந்தால் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக யாராவது செயற்படும்
ஏதாவது சம்பவங்கள் இடம் பெற்றால் மட்டும்தான் பொதுத் தொல்லையை கட்டுப்படுத்தலுக்கான அத்தியாயம் இருக்கிறதே தவிர சட்டபூர்வமாக ஜனநாயக உரிமையை பயன்படுத்திய நடாத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு அந்த பிரிவை உபயோகப்படுத்த முடியாது என்பதை உரிய நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கொள்காட்டி சொல்லிருந்தோம்.
பொலிஸார் முறைகேடாக இந்த விடயத்தில் நடந்திருக்கிறார்கள். பொலிஸார் கைது செய்த விதம், அவர்கள் தாங்களாகவே வீதியை மறித்து விட்டு மக்கள் வீதியை மறித்ததாக நீதிமன்றுக்கு தகவலை கொடுத்தது என பல விடயங்களை சொல்லியிருந்தோம். இந்த விடயங்களை கருத்தில் கொண்டு பொலிஸார் நீதிமன்றத்திற்கு கூறிய தகவலை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்திருந்தோம்.
விசேடமாக காணி உரிமையாளர்களும் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக காட்டப்பட்டு உள்ளார்கள். தன்னுடைய காணியை திருப்பித் தருமாறு கேட்பதற்கு காணி உரிமையாளருக்கு உரித்து இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
சமாதானத்தை பேணுவதற்காக அவர்கள் பிணைமுறியை கைச்சாத்திட வேண்டும் என இன்னொரு வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. சமாதானத்தை இவர்கள் குலைக்கவேயில்லை.
இரு தரப்பினர்கள் இடையே மோதல் என்று சொன்னால் இன்னொரு தரப்பை நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த விடயத்திலே முறைகேடாக பொலிஸார்தான் சட்டவிரோதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
நீதிவான் பொறுமையாக எங்கள் அனைவருடைய சமர்ப்பணங்களையும் செவிமடுத்த பின் கட்டளைக்காக பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார். அதுவரையிலும் தங்களுடைய சொந்த பிணையிலேயே அவர்கள் வெளியே போகலாம் என்று உத்தரவையும் கொடுத்துள்ளார் என்றார்.
இந்த வழக்கில் மூத்த சட்டத்தரணி சிறீகாந்தாவும் ஆஜராகி தமது சமர்ப்பனத்தை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















