பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் பிரதான உற்பத்திய ஆலை நிர்மானப் பணிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கலந்துகொண்டு பிரதான உற்பத்தி ஆலைக்கான கட்டுமான பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
சுமார் 200 ஏக்கர் அளவிலான பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கான காணியில் ஒரு பகுதியிலேயே முதற்கட்டத் தொழிற்சாலைப் பணிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், தொழிற்சாலைச் சுற்றுவட்டாரத்தில் இரசாயன உற்பத்திகளுடன் தொடர்புடைய புதிய கைத்தொழில் முயற்சிகளை தனியார்துறையினர் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பரந்தன் கெமிக்கல் கம்பனி பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதன்மூலம் இந்தப் பகுதி ஒரு இரசாயன கைத்தொழில்பேட்டையாக வளர்ச்சியடையும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
திரவ வடிவிலான கொஸ்டிக் சோடாவை பிரதான உற்பத்தியாகக் கொண்டு இயங்கவிருக்கின்ற இந்தத் தொழிற்சாலை மூலம், மேலதிக விளைபொருட்களாக குளோரின், ஐதரோகுளோரிக் அமிலம், சோடியம் ஹைபோகுளோரைட் என்பனவும் உப உற்பத்திகளாக மேற்கொள்ளப்படும் என்று இதன்போது கெமிக்கல் கம்பனி பிரதிநிதிகள் கூறினர்.
இதர பல உற்பத்தி முயற்சிகளான, சோப், சுத்திகரிப்பு திரவங்கள், துணி சுத்திகரிப்பு மற்றும் நிறமூட்டல், உணவு பதனிடல் என பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியமான மூலப்பொருள்களாக அமையும் இதன்மூலம் மேலும் பல கைத்தொழில்துறைகள் பயனடையும் என்றும் தெரிவித்தனர்.


















