பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான சிறிதரன் மீது தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக எதிர்க்கட்சி பிள்ளைகளின் எதிர்காலத்தை இல்லாதொழிக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
பாராளுமன்றில் நேற்றுமுன்தினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், எதிர்க்கட்சியினர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்திருந்தால் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பல விடயங்களை எம்மால் வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் பிரேரணையை கொண்டு வரவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. பிரதமருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஹிஸ்புல்லா உட்பட முஸ்லிம் கட்சிகளும் கைச்சாத்திடவில்லை. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தரப்பினருக்கு எதிரான செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது.
இதன் ஒரு அங்கமாகவே தயாசிறி ஜயசேகர அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான சிறிதரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஊழல்வாதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற நிலையில் தான் ஒரு தரப்பினர் அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுகிறது என்று போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியின் ஒருசில உறுப்பினர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை இல்லாதொழிப்பார்கள் என்றார்.


















