-க.கனகராசா-
பட்டத் திருவிழாவின் போது சுகாதார நடைமுறைகளினை மீறிய 19 உணவு கையாளும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று எச்சரிக்கையுடன் 440,000 ரூபா தண்டம் விதித்துள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான பட்டத்திருவிழாவின் போது சுகாதார நடைமுறைகளான மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை, திண்மக்கழிவுகளை திறந்த வெளியில் அப்புறப்படுத்தாமை, அனுமதிக்கப்பட்ட உணவுத்தர கொள்கலன்களை உணவுப்பொதியிடலுக்கு பயன்படுத்தாது பிளாஸ்ரிக் ரக கொள்கலன்களை பயன்படுத்தியமை, முகச்சவரம் மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவினை கையாண்டமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஐஸ்கிறீம் வாகனங்கள், பஞ்சு மிட்டாய் உற்பத்தி, காரம் சுண்டல் வண்டில்கள், பானிப்பூரி விற்பனை நிலையங்கள் உட்பட 24 உணவு கையாளும் நிலையங்களிற்கு எதிராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸினால் தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்தான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 19 உணவு கையாளும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் எச்சரித்து 4,40,000 ரூபா தண்டம் விதித்தது.
இதேவேளை மன்றுக்கு சமூகம் தராத ஐவருக்கான வழக்கினை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளது.


















