-தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்-
எங்களால் பேச முடியாத போது எங்கள் குரலை எடுத்துச் சென்றவர் மனித உரிமை போராளி ரி.குமார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை ரி.குமார் என்று அழைக்கப்படும் த.முத்துக்குமாரசாமியின் அஞ்சலி நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் நேற்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
எமது நீதி வேண்டிய நீண்ட போராட்டப் பயணத்தில், மறைந்த ரி. குமார் என்றழைக்கப்படும் தம்பித்துரை முத்துக்குமாரசாமியை ஆழ்ந்த நன்றியுடனும், மரியாதையுடனும், துயரத்துடனும் நினைவுகூருகிறோம்.
அவரது கல்விஅறிவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதிக்காக முழுமையாக அர்ப்பணித்ததுடன் தமிழர்கள் அனுபவித்த துயரங்களை உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தார்.
1977 இனக்கலவரத்தின் போது, கொழும்பில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழர்களை, லங்கா ராணி என்ற பயணக் கப்பல் மூலம் தமிழ் தாயகமான வடகிழக்கிற்குச் செல்வதற்கு ரி. குமார் முக்கியப் பங்காற்றினார்.
1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரங்களின் போது, அவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் இருந்தபோதும், அகதி முகாம்களில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு வழிகாட்டி, பல தமிழர்கள் பாதுகாப்பாகத் தங்கள் தாயகத்தை அடைய உதவினார்.
சர்வதேச மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் ஒரு சுயநிர்ணய வாக்கெடுப்பு மட்டுமே தமிழ் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான ஜனநாயக வழி என்று ஆழமாக நம்பினார். மேலும் அதற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். குரலற்ற மக்களுடன் அவர் உறுதியாக நின்றார். நாங்கள் பேச முடியாதபோது எங்கள் குரலை எடுத்துச் சென்ற ஒரு மனிதர் என்றனர்.


















