-நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்-
-த.சுபேசன்-
இலங்கை போக்குவரத்து சபைக்கு விரைவில் புதிய ஆளணி நியமனம் மற்றும் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்வனவு என்பன இடம்பெறவுள்ள நிலையில் கிராமங்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் விஸ்தரிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும், தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இளங்குமரன் தெரிவித்தார்.
தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
பல கிராமங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை தேவைப்படுகின்றது. இருப்பினும் தற்போது காணப்படுகின்ற ஆளணி பற்றாக்குறை மற்றும் பேருந்துகள் பற்றாக்குறையை காரணம் காட்டி அந்த சேவைகளை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இருப்பினும் எதிர்காலத்தில் இந்த நிலை தொடராது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு மூவாயிரம் புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய இருக்கின்றோம். இதன் ஊடாக கிராமங்களுக்கான போக்குவரத்து சேவையை விஸ்தரிக்க முடியும்.என மேலும் அவர் தெரிவித்தார்.


















