-அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் அழைப்பு-
வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
காலை பத்து மணிக்கு நெடுங்கே பேருந்து நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் ஒன்றுகூடவுள்ளதோடு அங்கிருந்து பேரணியாக வருகை தந்து வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவுள்ளதோடு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது.
இந்தப்போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீ ரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்களும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2011 ஆம் ஆண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அப்போது வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களை அடுத்து கிடைப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது குறித்த திட்டம் மீள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 23,500 மில்லியன் ரூபா செலவில் மீண்டும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் மணலாறு பிரதேசம் வெலிஓயாவாக மாற்றப்பட்டிருக்கின்ற நிலையி;ல், அங்குள்ள குடியேற்ற பெரும்பான்மை மக்களின் நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் தமிழ் மக்களின் எல்லைக்கிராமங்கள் கையகப்படுத்தப்படும் ஆபத்துக்கள் காணப்படுவதோடு, தமிழ் மக்களின் வாழ்வாதரத்தினை பூர்த்தி செய்யும் வயல்நிலங்களும் பறிபோகும் ஆபத்துக்கள் காணப்படுவதாக கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த விடயத்தினை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதை மக்கள் பிரதிநிதிகளும், சிவில் அமைப்புக்களும் ஆணித்தனமாக வலியுறுத்தும் முகமாக இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


















