அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரல் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் ஆய்வாளர் சி.யோதிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், வைத்திய கலாநிதி இ.சிவசங்கர், கணக்காளர் வ.தில்லைநாதன் ஆகியோர் முத்துக்குமாரசாமி தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்து வாலிபர் சங்கத்தின் செயலாளர் யோ. சஜீதராவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அமரர் முத்துக்குமாரசாமியின் உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு
சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர் சி.சு.யோதிலிங்கம் எழுதிய தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆரம்பகர்த்தா த. முத்துக்குமாரசாமி என்ற கையேடும் வெளியிடப்பட்டது.


















