-கஜிந்தன்-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பதவி ஆசையற்றவர். சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா வின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட அன்னாரது திருவுருவச் சிலை கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நினைவுப் பேருரை மற்றும் மேடை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவை சேனாதிராசாவை எனது 10 வயதிலிருந்தே எனக்குத் தெரியும். அவர் எனது தந்தையாரைச் சந்திப்பதற்காக அடிக்கடி எமது வீட்டுக்கு வருவார். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எங்களைப் போன்ற இளையோருக்கு அரசியல் வகுப்புகளை நடாத்திய ஆசானாகவும் அவர் திகழ்ந்தார்.
நான் பிரதேச செயலாளராகவும், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றிய காலங்களில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். அதிகாரத்தில் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்தார். அவரை எந்த நேரத்திலும் எவரும் இலகுவாகச் சந்திக்க முடியும்.
தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ எந்தவொரு சலுகையையும் அவர் எதிர்பார்த்ததில்லை. இன்றைய அரசியல் சூழலில் அவர் மிக வித்தியாசமான ஒரு மனிதராகவே வாழ்ந்து மறைந்துள்ளார். அவரிடமிருந்து எப்போதும் எதிர்மறையான பதில்கள் வராது. அந்தளவவுக்கு அவர் மென்மையான உள்ளம் கொண்டவர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தனது இளமைக் காலத்தைத் தியாகம் செய்து, பல வருடங்கள் சிறையில் வாடியவர். அத்தகையதொரு சிறந்த தலைவரை இழந்தமை எமது
சமூகத்துக்குப் பேரிழப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















