-உறுப்பினர் சிவபாதம் கேள்வி-
-த.சுபேசன்-
நிதி இருந்தும் கைதடி உப அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கபடாமை ஏன் என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம் கேள்வி எழுப்பினார்.
சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி உப அலுவலகம் கைதடியில் உள்ள ஆறு கிராம அலுவலர் பிரிவிலும் உள்ள மக்களுக்கான சேவை வழங்கும் அரச நிறுவனம்.
அந்த அடிப்படையில், கிராம சபைகளை ஒன்றிணைத்து பிரதேச சபை அமைக்கப்பட்டபோது கைதடி பிள்ளையார் கோயில் முன்பாக கைதடி கிராமசபை இயங்கிய காணியில் அமைந்திருந்த சுண்ணாம்பு கட்டடத்தில் சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி உப அலுவலகம் இயங்கத் தொடங்கியது.
2000 ஆம் ஆண்டில் இருந்து சுண்ணாம்புக் கட்டடம் தொடர்ச்சியாக பழுதடைய ஆரம்பித்தபோதே புதிய கட்டடம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உப அலுவலக கட்டடம் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்தபோது அதனை இடித்துவிட்டு அவ்விடத்தில் புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது.
இருப்பினும், உப அலுவலகம் இன்றுவரை வாடகை கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றது.
இந்நிலையில் உப பணிமனைக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு என்று குறித்தொதுக்கிய நிதி நிரந்தர வைப்பில் வைக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை எடுத்து 15 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர கட்டடம் இன்றிய உப அலுவலகத்துக்கு புதிய நிரந்தர கட்டடம் அமைப்பது என்ற தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை பழைய கட்டடத்தை அகற்றக்கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பும்போது விரைவாக பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்படும் என தவிசாளர் வாக்குறுதி வழங்கி வருகின்ற போதிலும் இன்று வரை எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை. இந்த சபைக் காலத்திலேயே அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.


















