-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பிலும்
சாட்சியம் அளிப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதர தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இணையவழியில் சாட்சியம் வழங்க அனுமதிக்க கோரியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டபாய ராஜபக்ஷ தனது சட்டத்தரணி ஊடாக சத்திய கடதாசியை சமர்ப்பித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வருவதற்கு என்ன அச்சுறுத்தல் இருக்கிறது என்பதனை நியாமான காரணங்களுடன் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் கடந்த வழக்கு தவணையின் போது உத்தரவிட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ தரப்பு அச்சுறுத்தல் என சத்திய கடதாசியை சமர்ப்பித்தபோதும் என்ன காரணத்திற்காக அச்சுறுத்தல் என்பதை தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்பதை மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இது தொடர்பிலான விடயங்களின் எழுத்து மூலமான சமர்ப்பணங்களை இரு தரப்பினரும் எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி அழைக்கப்படும் அடுத்த வழக்கு தவணையின்போது சமர்பிக்க வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார்.


















