-சிறிநேசன் எம்.பி நையாண்டி-
ஒரு கட்சிக்குள் இருந்து பதவி பரிமாறப்படுகின்ற போது அல்லது ஒருவரிடம் இருந்த பொறுப்பு அவரது விருப்பத்துக்கு மாறாக பெற்றுக்கொண்டு இன்னுமொருவருக்கு கொடுக்கப்படுகின்ற போது இதனைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இது கொண்டாட வேண்டிய ஒரு விடயமும் இல்லை, என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத:து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடவியலாளர்கள் எழுப்பின கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடமிருந்து பாராளுமன்ற குழு தலைவர் என்ற பொறுப்பை எமது கட்சியின் அரசியல் குழு தற்காலிகமாக இடைநிறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தற்காலிகமாக கொடுத்திருக்கின்றது. இதுதான் உண்மையாக நடந்த சம்பவம்.
இந்த சம்பவத்தின் பின்னர் பல இடங்களில் பதாகைகள் கட்டி தொங்க விடப்பட்டதையும், பட்டாசுகள் வெடித்ததையும், இனிப்புகள் கொடுத்ததைப் பற்றியும் ஊடகவியலாளர்கள் எம்மிடம் கேட்கின்றார்கள்.
உங்கள் கட்சிக்குள் இருந்துதான் இந்த பதவிகள் பரிமாறப்பட்டிருக்கின்றபோது ஏன் பட்டாசு வெடிக்கச் செய்தார்கள், ஏன் இனிப்பு கொடுக்கிறார்கள், ஏன் பதாகைகள் தொங்க விட்டார்கள், என்ற கேள்விகளை ஊடகவியலாளர்கள் எங்கள் மீது தொடுக்கின்றீர்கள்.
உண்மையில் நானும் கேட்கின்றேன் ஒரு கட்சிக்குள் இருந்து பதவி பரிமாறப்படுகின்ற போது அல்லது ஒருவரிடம் இருந்த பொறுப்பு அவரது விருப்பத்துக்கு மாறாக பெற்றுக்கொண்டு இன்னுமொருவருக்கு கொடுக்கப்படுகின்ற போது இதனைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. இது கொண்டாட வேண்டிய ஒரு விடயமும் இல்லை.
ஏனெனில் கடந்த காலத்தில் சம்பந்தன் ஐயா அவர்களும் இந்த பதவியை வகித்திருந்தார். அவருக்கும் ஆதரவா பட்டாசுகளும் வெடிக்கவில்லை, பதாகைகளும் தொங்கவிடப்படவில்லை, இனிப்புகளும் பரிமாறப்படவில்லை, அதேபோன்றுதான் சிறீதரன் அவர்களும் அந்த பொறுப்பை கையாண்டிருந்தார். அதற்கும் கொண்டாட்டம் எதுவுமே நடைபெறவில்லை. அவ்வாறு இருக்கின்றபோது இந்த சிறிய விடயத்தை மிகவும் ஒரு கொண்டாட்ட நிகழ்வாக ஏன் மாற்றினார்கள்? யார் மாற்றினார்கள், யாரால் மாற்றப்பட்டது. என்ற கேள்வி இருக்கின்றது என்றார்.


















