மிகப்பெரும் நிலப்பரப்பையும், வளங்களையும் கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமை சுட்டியில் முதலிடத்தில் இருப்பது வேதனையானது என கூறியுள்ள வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் முல்லைத்தீவு வளம்பெறும் எனவும் கூறினார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாணத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பு மற்றும் இயற்கை வளங்களை, கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமைச் சுட்டியில் முதலிடத்தில் இருப்பது வேதனையானது. இம்மாவட்டத்தை மீட்டெடுக்கும் பணிகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் துரிதப்படுத்தப்படும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் வடக்கு மக்கள் மீது கொண்டுள்ள விசேட கரிசனையை, நாம் எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.


















