-இ.கலைஅமுதன்-
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புகள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிறு நடைபெறவிருந்த தமிழ் கட்சிகளுடனான சந்திப்புக்கு நாங்கள் இடைஞ்சலாக இருக்கவில்லை எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இது தொடர்பில் வெளியான செய்தியில் உண்மையில்லையெனவும் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு, மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழ்க் கட்சிகளை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வருமுகமாக கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பினை ஒழுங்கு செய்திருந்தது.
இந்த விசேட சந்திப்பு தமிழ் தேசிய பேரவை எதிர்வரும் 15 ஆம் திகதி சிவில் சமூகத்துடன் நடத்தவுள்ள சந்திப்பு காரணமாக காலவரையறை குறிப்பிடாது தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய பேரவை நடத்தவுள்ள கூட்டம் காரணம் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தியானது முற்றிலும் தவறானது.
இந்நிலையில் நான் சுவிஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டு 19ஆம் திகதி கூட்டம் கைவிடப்பட்டு இருக்கின்றதா? கைவிடப்பட்டு இருந்தால் தமிழ் ஊடகங்களிலே பரப்பப்பட்டது போல தமிழ்த் தேசியப் பேரவை 15 ஆம் திகதி நடத்த இருக்கின்ற கூட்டத்தினால் அதிருப்தி அடைந்தமை காரணமா எனக் கேட்டேன். அதை அவர்கள்
முற்று முழுதாக மறுத்தார்கள்.
நாங்கள் அந்த முயற்சியை கைவிடவில்லை. 19 ஆம் திகதி சந்திப்பு தொடர்பில் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. இதனால் இரகசியத் தன்மை இல்லாமல் போய்விட்டது என தமிழ் கட்சிகள் கருதலாம் என்ற காரணத்தால் அது அவர்களுக்கு பிரச்சினையாக இருக்குமோ என்ற ஒரு சந்தேகம் எழுந்ததே தவிர, தங்களுக்கு அந்த செய்தி வெளிவந்தது பெரிய பிரச்சினை கிடையாது. 19ஆம் திகதிக்குரிய சந்திப்பு முயற்சிகள் தற்போது உறுதிப்படுத்த முடியாத இடத்தில் இருக்கிறது என்று தூதரகத்தால் சொல்லப்பட்டது.
இது இவ்வாறு இருக்க நான் சுவிஸ் அரசாங்கத்தை கேட்டு இந்த முயற்சியை மேற்கொண்டதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. அதுவும் தவறாது. தமிழரசுக் கட்சியியினுடைய சுமந்திரனே சுவிஸ்லாந்து தூதரகத்தை கேட்டு 19 ஆம் திகதி சந்திப்பை ஏற்படுத்தினார்.
அதே தரப்பால், 15 ஆம் திகதி தமிழ் தேசியப் பேரவை சிவில் சமூகத்துடன் நடத்தவிருந்த சந்திப்பினை நான் ஒழுங்கு செய்திருப்பதாகவும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக புதிய அரசியலமைப்பில் தீர்வு தொடர்பில் இரண்டு கூட்டங்கள் அவசியம் இல்லை,இதனால் தங்களுக்கு இது சம்பந்தமாக குழப்பமாக இருப்பதால் தங்களுக்கு உரையாடலில் கலந்து கொள்வது சம்மந்தமாக உறுதிப்படுத்த முடியாது என்ற கருத்தை தூதரகத்துக்கு சொல்லப்பட்டிருந்தது. இதுவே உண்மை.
ஊடகங்கள் எங்களோடு தொடர்பெடுத்து இந்த கருத்தை கேட்டிருக்கலாம். நேரடியாக தூதரகத்தை கேட்டிருக்கலாம். அப்படி இல்லாமல் முற்று முழுதாக உண்மைக்கு புறம்பான செய்திகளை போட்டது எனக்கு கவலையளிக்கின்றது.
19ஆம் திகதி சந்திப்புக்கு எந்த விதத்திலும் நாங்கள் இடைஞ்சலாக இருக்கவில்லை. 15ஆம் திகதி கூட்டம் நடைபெறும் போது 19ம் திகதி சுவிஸ்ட்லாந்து தூதரக சந்திப்பு தேவையில்லை என தமிழரசுக் கட்சி நினைத்தால் 15ம் திகதி கூட்டத்திற்கு வர வேண்டும். நீங்கள் வர தயாரில்லை என்றால்,சிவில் சமூகத்துடன் பொது ஒழுங்கில் ஒரு பொது நிலைப்பாடு வரக் கூடாது என்பதற்காக குழப்பும் நோக்கத்துடன் சதி வேலைகள் நடைபெற்றதா என்ற கேள்வி எழுகிறது.
நாங்கள் அனைத்து தரப்பினரையம் தீர்வு தொடர்பில் ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியை எப்போதோ ஆரம்பித்துள்ள நிலையில் அதிலிருந்து விலகிப் போனவர்கள் தாங்களாகவே ஒரு முயற்சியை வேறொரு இடத்தில் ஏற்படுத்துவதற்கு ஒரு முயற்சி செய்துவிட்டு நாங்கள் தொடர்ந்து செய்துவரும் முயற்சியை நிறுத்த எதிர்பார்ப்பது தவறு.
நீங்கள் 19ம் திகதி சுவிஸ் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் சந்திக்கலாம் என்று சொன்னால் ஏன் 15ம் திகதி ஏற்பாட்டில் சந்திக்க முடியாது. இதில் கலந்து கொள்ளப் போகும் மக்கள் யார்? தமிழர்கள் தானே!
2029ம் ஆண்டுக்குள் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும். ஐக்கிய ராஜ்ய தமிழர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டால் அதற்குப் பிறகு தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை உச்சரிப்பதை கூட சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகவே இந்த யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு தயவுசெய்து ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.


















