-பலாலி குறித்து கரிசனை-
-த.அம்பிகாவதி-
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கடன்களாக வழங்கப்பட்ட சில உதவித்திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி ஆகியோர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய சமயம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இச்சந்திப்பில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளின் அபிவிருத்தி மற்றும் காரைநகர் படகுக் தள அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆளுநருடன் பிரதி உயர்ஸ்தானிகர் கலந்துரையாடினார்.
அண்மையில் ஏற்பட்ட டித்வா பேரிடரின் பின்னரான உதவித் திட்டங்கள் குறித்தும், இந்தியாவின் ‘அயலவருக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் அடிப்படையிலான முன்னுரிமைகள் தொடர்பிலும் பிரதி உயர்ஸ்தானிகர் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார். அத்துடன், கடன்களாக வழங்கப்பட்ட சில உதவித் திட்டங்கள் தற்போது நன்கொடைகளாக மாற்றப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பலாலி விமான நிலையத்தின் முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், எதிர்காலத்தில் அதன் ஏனைய விரிவாக்கச் செயற்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கம் விடுக்கும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
















