-மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஏற்க முடியாது – சிறீதரன் எம்.பி.
அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரமான தென்னந்தோப்புகளையும், விவசாய நிலங்களையும் அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயுமுகமாக அண்மையில் அங்கு அவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள 34 காற்றாலைகளில், சுமார் 9 காற்றாலைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளிலும், செழிப்பான தென்னந்தோப்புக் காணிகளிலும் அமைக்கப்படவுள்ளன.
இதனால் சுமார் 2,500க்கும் மேற்பட்ட காய்க்கும் தென்னை மரங்கள் அழிக்கப்படவுள்ளதோடு, எமது வாழ்வாதாரமும் இருப்பிடமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
இந்த நிலம் எமது பூர்வீக நிலம் எமது வாழ்வியலும் பொருளாதாரமும் இந்த மண்ணோடு பிணைந்துள்ளது. எனவே, இதற்கு மாற்றாக வேறு காணிகளையோ அல்லது நட்ட ஈட்டையோ பெறுவதற்கு நாம் தயாரில்லை’ என மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்:
அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பூர்வீக நிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரமான தென்னந்தோப்புகளையும், விவசாய நிலங்களையும் அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் இத்திட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.
ஆனால், மக்களை இடம்பெயரச் செய்தோ அல்லது அவர்களின் பொருளாதாரத்தைச் சிதைத்தோ இத்திட்டம் முன்னெடுக்கப்படக்கூடாது.
பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், கள யதார்த்தத்தையும் புரிந்துகொண்டு, குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களைத் தவிர்த்து மாற்று இடங்களில் இத்திட்டத்தை முன்னெடுப்பதே, முறையாகும் என்றார்.
இந்தக் கள விஜயத்தின் போது, பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
















